தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முறைகேடாக பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி டி.எஸ்.பி சுந்தர்ராஜன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் மதியம் 2.30 மணியளவில் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை பூட்டி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பத்திரங்கள் குறித்து சோதனை செய்து பின் வெளியே அனுப்பி வைத்தனர். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவதால் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் காத்திருந்து திரும்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து கதவைப் பூட்டியவாறே பல மணி நேரம் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திடீரென சில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே சென்று மீண்டும் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கையில் பணம் எண்ணும் மிசின் மற்றும் பை உள்பட சில ஆவணங்களையும் உள்ளே கொண்டு சென்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பணம் முறைகேடாக அலுவலகத்தில் மறைத்து வைத்துப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள் என பேச்சும் பரவலாக இருந்து வருகிறது. இதனால் ஆட்சியர் அலுவலகமே பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது.