பழனி தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 13 தேதி கவன ஈர்ப்பு கடையடைப்பு நடைபெறும் என பழனி நகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலின் கிரிவலப் பாதை 1948 ஆம் ஆண்டு முதல் பழனி நகராட்சி நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை ஆய்வு செய்யவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழனி அடிவாரம் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாக போராட்டங்கள் எழுந்தது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நகராட்சி மன்ற கூட்டத்தில் பழனி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து நகர்மன்றம் சார்பில் ஜூலை 13ம் தேதி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு வர உள்ள நிலையில், அந்த தேதியில் போராட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.