கடந்த இரண்டு வருடங்களாகவே உலக அளவில் மிகப் பெரும் பேசுபொருளாக இருக்கிறது கரோனா. தற்போது வரை உலக நாடுகள் கரோனா பாதிப்புக்கு எதிராகத் தடுப்பூசிகளை செலுத்தி போராடி வருகிறது. தற்பொழுது புதிதாக 'ஒமிக்ரான்' என்ற வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்திலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அது தொடர்பான விளக்கங்களைத் தெரிவித்து வருகிறார். 'ஒமிக்ரான்' தொற்றுக்கு பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் பொது இடங்களுக்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடத்திற்கு வர அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்படுவர் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருத்தணி தியேட்டரில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் ''கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போட்டிருந்தால் தான் கோவில் மற்றும் டாஸ்மாக்கில் அனுமதி என்ற கட்டுப்பாடு விரைவில் கொண்டுவரப்படும்'' என்றார்.