பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று பேரவையில் கொண்டுவரப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடகா ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது. மேகதாது அணையை கொண்டு வருவோம் என கர்நாடகா அரசு பேசலாம், ஆனால் செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாது திட்டத்திற்கு இசைவு தர மாட்டார்கள்'' என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கூச்சலிட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனை குறித்த அமைச்சர் துரைமுருகனின் விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், வெளியே வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.