பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக்கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். அடுத்தநாள் காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்த லாக்கர் ரூம் கதவை வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திரு.வி.க. நகர் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் நான்கு ஏடிஎம்களில் தொடர்ச்சியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கும் பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அண்மையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இருப்பினும், பெரம்பூரில் நிகழ்ந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக எந்த ஒரு துப்பும் கிடைக்காது இருந்தது. இந்நிலையில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக தற்போது பெங்களூரில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.