ஈரோட்டில் மின் கோபுரத்தில் ஏறி வடமாநில இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 80 அடி மின் கோபுரத்தில் ஏறிய வடமாநில இளைஞர் ஒருவர் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. மாலை 3:30 மணிக்கு அந்த பகுதிக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் இந்த பகுதியிலிருந்த மின் கோபுரத்தில் ஏறி உச்சிக்கு சென்றார். இதனையறிந்த ரயில்வே ஊழியர்கள் அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த இளைஞர் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிவித்தார். ஆனால், தன்னுடைய பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை கூற மறுத்துவிட்டார். தன்னுடைய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க எனக்கு ஒரு செல்போன் தேவை என அந்த இளைஞர் கூறியுள்ளார். உடனடியாக கீழே இருந்த ஊழியர்கள் செல்போனை கோபுரத்தின் கீழ் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும் அந்த செல்போனை எடுக்க அவர் கீழே இறங்கி வரவில்லை. கீழே விழுந்தால் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தில் தொடர்ந்து மேலேயே இருந்தார்.
அருகில் உள்ள தேவாலயத்தின் பாதிரியார் ஒருவரை வரவழைக்க வேண்டும் என கேட்டார் அந்த வடமாநில இளைஞர். உடனடியாக ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தீயணைப்புத் துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து மீண்டும் அந்த இளைஞர் கீழே இறங்காமல் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய பெயர் என்ன, உண்மையிலேயே அவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தானா? எதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என எந்த விவரங்களையும் பெற முடியாத சூழ்நிலையில், போலீசார் மற்றும் மீட்புப் துறையினர் தவித்து வருகின்றனர். இதற்கிடையே விட்டுவிட்டு அந்த பகுதியில் மழை பொழிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வடமாநில இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதாக வெளியான தகவலால் அந்த பகுதி மக்கள் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.