வடகிழக்கு பருவமழை தொடர்பாக, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/10/2021) காலை 11.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "வடகிழக்கு பருவமழையையொட்டி, அனைத்து துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மருந்து, ஆக்சிஜன் உருளைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் போதிய அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். பருவமழை காலத்தில் மக்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆழ்கடல் சென்றுள்ள மீனவர்களுடன் அதிகாரிகள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்து பகுதிகளையும் ஆய்வுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முழு கொள்ளளவை எட்டியுள்ள அணைகள், ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி அணை பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கி உபரி நீரைத் திறந்துவிட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும். மழைக்காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதுடன் பில்லர் பாக்ஸ்களை உயர்வான இடங்களில் வைக்கவும் வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க வடிகாலைத் தூர்வார வேண்டும்.
அறுவடை செய்த நெல் மணிகளைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை; கையாளவில்லையெனில் பேரிடராக மாறும். இயற்கையை முறையாக எதிர்கொள்ள தவறும்போது அது தான் யார் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டுச் செல்கிறது. இயற்கையைக் கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா? பேரிடராக மாற்றப் போகிறோமா? என்பது நம் கையில்தான் உள்ளது. பருவமழைக் காலத்தில் அவசர உதவிக்கு 1070, 1077 ஆகிய இலவச எண்களை மக்கள் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.