பள்ளிபாளையம் அருகே, வடமாநில வாலிபர்கள் இருவர் கைத்துப்பாக்கி, எட்டு தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வால்ராஜபாளையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடமாநில வாலிபர்கள் இருவர் ஊருக்குள் புதிதாக வந்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள நூற்பாலைகளுக்கு வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்து விடும் முகவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியும் உள்ளனர். தினமும் காலையில் எழுந்து வெளியே செல்வதும், இருட்டிய பிறகு வீடு திரும்புவதுமாக இருந்துள்ளனர். இவர்களின் மர்மமான நடவடிக்கைகள் மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. இதுகுறித்து வெப்படை காவல்நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர், அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளை கடந்த சில நாள்களாக ரகசியமாக கண்காணித்துள்ளனர். ஜன.26ம் தேதி மாலை, வாலிபர்கள் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்களில் ஒருவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஸ்குமார் (26) என்பதும், மற்றொருவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (19) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஒரு பெட்டியை சோதனை செய்து பார்த்தபோது அந்தப் பெட்டியில் ஒரு ரிவால்வர் கைத்துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி, உரிமம் இல்லாத துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.
அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இரண்டு வாலிபர்களும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், உண்மையில் அவர்கள் பள்ளிபாளையத்திற்கு வந்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய கூட்டாளிகள் யாரேனும் இருக்கிறார்களா? ஏதேனும் சதித் திட்டத்துடன் வந்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். வடமாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.