
இரவு நேரம் சாலையில் நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்து செல்போன் பறித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் மற்றும் சன்னி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் வடமாநில இளைஞர்களை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பைக்கில் வந்த கும்பல் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுபேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.