
நாமக்கல் அருகே, கோழிப்பண்ணைகளுக்கு வடமாநிலத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களைப் பிடித்துக்கொடுக்கும் வடமாநில முகவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ். வாழவந்தி கே. புதுப்பாளையம் பகுதியில் கடந்த 7ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாகக் கிடந்தவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபராஜ் சாகர் மகன் சிம்பு சாகர் (26) என்பது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களைக் கமிஷன் அடிப்படையில் அழைத்துவரும் முகவராக செயல்பட்டுவந்துள்ளார். இந்த தொழில் தொடர்பாக அவருக்கு சிலருடன் மோதல் இருந்துவந்ததும், அதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
அவரை கொலைசெய்த மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்மோல் (21), சம்பு ஆகிய இருவரும் சேர்ந்து சிம்பு சாகரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. பரமத்தி வேலூர் அருகே பதுங்கியிருந்த ராஜ்மோலை காவல்துறையினர் ஜூன் 9ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜ்மோலும் வடமாநிலங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களைக் கமிஷனுக்கு நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளுக்கு அழைத்துவரும் முகவர் வேலை செய்தது தெரியவந்தது. கூலித்தொழிலாளர்களை அழைத்து வருவதில் ராஜ்மோலுக்கும் கொலையுண்ட சிம்பு சாகருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துவந்துள்ளது. அதாவது ராஜ்மோல் கேட்கும் கமிஷனைக் காட்டிலும் குறைந்த கமிஷனுக்கு ஆட்களை நியமனம் செய்து தருவதாகவும், கூடுதல் ஊதியம் வாங்கித் தருவதாகவும் கூறி ராஜ்மோல் அழைத்துவந்த ஆட்களை எல்லாம் சிம்பு சாகர் தன் பக்கம் இழுத்துள்ளார்.
இதுபோன்று அடிக்கடி நடந்ததால், சிம்பு சாகர் மீது ராஜ்மோல் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் கடந்த 6ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்மோலும், அவருடைய நண்பர் சம்புவும் சேர்ந்து சிம்பு சாகரை சமாதானம் பேச வரும்படி கே.புதுப்பாளையத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், திடீரென்று சிம்பு சாகரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு சடலத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். ராஜ்மோல் அளித்த தகவலின்பேரில் தலைமறைவாக உள்ள அவருடைய நண்பர் சம்புவை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.