துன்பம் களைவதே நட்பெனச் சொல்கிறார், வள்ளுவர் பெருந்தகை. நண்பன் என்றில்லை, யாராக இருந்தாலும் உதவுவதற்கு ஒரு மனம் வேண்டும். கரோனா பரவிவரும் இத்தருணத்தில், பல நல்ல உள்ளங்களை நாம் காண முடிகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாண்டித்துரை. இவர், சென்னை கே.கே.நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
கரோனா தொற்றுள்ளோருக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது பாண்டித்துரை ஈடுபட்டுவருவதை அறிந்த அவருடைய அம்மா, “அவங்கள தொட்டுத் தூக்குவல்ல. வேண்டாம் உனக்கு இந்த வேலை.“ என்று செல்போனில் அழைத்து கெஞ்சுகிறார். பாண்டித்துரையின் அப்பா, “பிச்சை எடுத்தாவது உன்னுடைய தேவையை நிறைவேற்றுகிறேன். இந்த வேலை உனக்கு வேண்டாம்.” என்று மன்றாடுகிறார்.
செல்போனில் தன்னுடன் பேசும் பெற்றோரிடம் பாண்டித்துரை “இந்த மாதிரி பெத்தவங்க கூப்பிட்டாங்கன்னு, எல்லாரும் 108 ஆம்புலன்ஸ் வேலையே வேணாம்னு வீட்டுக்கு போயிட்டா, இந்த வேலையை யார்தான் பார்ப்பாங்க?” என்று தன்னலமின்றி கேள்வி கேட்கிறார். அம்மா, அப்பா, மகன் ஆகிய மூவர் கைபேசியில் உரையாடும் இந்த ஆடியோ தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது. நம் நாட்டில், சுயநல வாழ்க்கையில் சுகம் காண்போர் ஆயிரம் பேர் இருந்தாலும், அவர்களுக்கு மத்தியில் பரந்த உள்ளம் கொண்ட பாண்டித்துரை போன்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
பாண்டித்துரைக்கு ஒரு ராயல் சல்யூட்!