ஸ்மார்ட்போனில் சிக்கிக் கிடக்கும் இளைஞர்கள் யாரும் செல்பி கலாச்சாரத்திலும் சிக்காமல் இருக்க முடியாது. நின்றால், நடந்தால், சாப்பிட்டால் என ஓவ்வொரு அன்றாட செயல்களிலும் ஒரு செல்பி எடுத்து அதனை சமூகவலைதளத்திலோ அல்லது விருப்பப்பட்டவர்களுக்கோ அனுப்புவதே இந்த செல்பி கலாச்சாரம் இவர்களுக்கு கற்றுத்தந்தது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த மனநோய் சில நேரங்களில் பெரும் ஆபத்தில் தான் முடிகிறது. செல்பியில் என்ன ஆபத்து என கேட்டால்? ரயில் வரும் போது அருகில் இருப்பது போல செல்பி எடுப்பது, ரயில் படிக்கட்டில் தொங்கியபடி செல்பி எடுப்பது என இளசுகளின் சேட்டைக்கு எல்லையே இல்லாத அளவிற்கு செல்பியில் சிக்கிதவித்து வருகின்றனர். இதில் பெரும் பாலானோர் இது போன்ற அபாயகராமக செல்பி எடுத்தால் சமூகவலைதளத்தில் அதிக லைக்ஸ் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவே நொடி பொழுது ஆபாயத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
இதனால், ரெயில் நிலையங்களில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பதும், ரயில் மீது ஏறி நின்று செல்பி எடுப்பதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்றுமுதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.