'தென் கைலாயம்' என அழைக்கப்படும் கோவை மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பக்தர்கள் ஏறுவதற்காக கொடுக்கப்பட்டிருந்த அனுமதியானது முடிவடைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். அதிகப்படியாக மலையேறும் பக்தர்கள் பலரும் துணிகளை வனப்பகுதியில் வீசிச் செல்வதால் தீப்பற்றி காட்டுத்தீ உருவாக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்த வனத்துறை, சமீபத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன் வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளிலிருந்து சுமார் 500 கிலோ துணிகளை அப்புறப்படுத்தியதாகத் தெரிவித்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மலையேறுவதற்கான அனுமதி காலம் முடிந்து விட்டதாகவும், இனி பக்தர்கள் யாரும் வெள்ளியங்கிரி மலைக்கு வர வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.