‘வைகோவுக்காக ஏங்கும் விருதுநகர்’ என்னும் தலைப்பில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி வெளியான நக்கீரன் இதழில், ‘விருதுநகர் மாவட்ட காங்கிரஸில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி சேர்மன் ஞானசேகரன், விருதுநகர் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி போன்ற சீனியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது கதர்ச்சட்டைகள் உள்ளுக்குள் வருத்தத்தில் இருக்கின்றனர்.’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அந்த வருத்தம் கதர்ச்சட்டைகளின் கொதிப்பாக மாறியிருக்கிறது. நாளை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சீனியர்களான, முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி நகர்மன்ற தலைவர் ஞானசேகரன் போன்றோர், மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என்ற தங்களின் எதிர்ப்பை, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தவிருக்கின்றனர்.
மாணிக்கம் தாகூர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி காங்கிரஸ் தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார் ஞானசேகரன். அந்தப் புகாரில் ‘2009 மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைத்து மாணிக்கம் தாகூரை வெற்றிபெற வைத்தோம். எம்.பி. ஆனபிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, கோஷ்டிகளை அவர் உருவாக்கினார். கட்சியில் பொறுப்பு தருவதற்கு பணம் பெற்றதால், கட்சி பலவீனமானது. விருதுநகர் தொகுதி நிலவரங்களை அறியாதவராக இருக்கிறார். அதனால், 2011 சட்டமன்ற வேட்பாளர் தேர்வு, நகர்மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு, 2013 மாவட்ட தலைவர் தேர்வு, 2016 சிவகாசி சட்டமன்ற வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் சொதப்பினார். மீண்டும் போட்டியிடுவதற்கு மாணிக்கம் தாகூருக்கு வாய்ப்பு தந்தால், விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.’ என்று தங்களின் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மாணிக்கம் தாகூரோ “கட்சியின் சீனியர்களை எதற்காக நான் புறக்கணிக்க வேண்டும்? தேர்தலின்போது எனக்கெதிராக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தவர்களை எப்படி அனுசரித்துப்போக முடியும்?” என்றார்.
காங்கிரஸ் என்றால் கோஷ்டி இல்லாமலா?