என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும்போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பதற்றமான சூழலில் டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். என்.எல்.சி. நிறுவனத்தின் இந்தச் செயலைக் கண்டித்துப் பாமகவினர் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து என்.எல்.சி. விவகாரம் குறித்துக் கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். இருப்பினும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இருப்பினும் அதற்குண்டான இழப்பீட்டையும் வழங்குவோம் என விவசாயிகளுக்குத் தெரிவித்துள்ளோம். வேளாண்மைத் துறை அமைச்சர் நேற்று என்.எல்.சி நிறுவன மேலாண் இயக்குநரை நேரடியாகச் சந்தித்து ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு குறைவாக உள்ளது, எனவே அதனை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அதற்கான இழப்பீட்டையும் அதிகரித்து அறிவித்துள்ளோம். சுமார் 264 ஹெக்டேர் நிலத்திற்கு அதிகமான கருணைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வழங்கியுள்ளோம்”எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்த கால்வாய் வெட்டும் பணி தற்காலிகமாக இன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறமால் இருக்க இன்று மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.