சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்ளிடம் மற்றும் பழைய கொள்ளிடம் ஆற்றில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகளைப் பிடித்து, தனியாக நெய்வேலியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அப்பகுதியில் முதலையால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்துப் பேசினார்கள். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளைப் பிடித்து முதலை பண்ணை அமைத்துத் தரக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்ற சார் ஆட்சியர் விரைவில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் குளிப்பதற்கு இரும்புக் கூண்டு அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நெய்வேலி பகுதியில் முதலை பண்ணை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.