நிர்மலாதேவி வழக்கு விசாரணை நடைபெறும் நாளான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வந்திருந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் சில பகீர் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நேற்று மதுரை மத்திய சிறையில் அடைபட்டிருக்கும் நிர்மலாதேவியைச் சந்திப்பதற்காக இரண்டு பேரை மனு போடவிட்டேன். யாரையும் அனுமதிக்கவில்லை. வழக்கறிஞருக்கும்கூட அங்கே அனுமதியில்லை. இது எனக்கு கிடைத்த செய்தி.. சிறைக்குள்ளே வைத்து நிர்மலாதேவியை அடிச்சிருக்காங்க. நேற்று 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்குப் பின்னால ஒரு ஆம்பள போயி அடிச்சிருக்கான். ‘நிருபர்களை நீ சந்திக்கக்கூடாது. முதலில் இந்த வக்கீலை (பசும்பொன் பாண்டியன்) மாற்று. அமைதியா போ. உன்னைக் காப்பாத்துறோம். ஆனா.. இந்த கோர்ட் உன்னைத் தண்டிக்கும். அடுத்து நீ விடுதலை ஆகுறத நாங்க பார்த்துக்கிறோம்.” என்றெல்லாம் பேச்சு வார்த்தை நடத்திருக்காங்க.
இந்த வழக்குல அரசியல் தலையீடு.. அமைச்சர் மிரட்டல் இருக்குதுன்னு தொடர்ந்து சொல்லிட்டு வர்றேன்ல. நடந்தது அத்தனையையும் ஒண்ணுவிடாம மீடியாகிட்ட நான் சொல்லிருவேனோன்னு சம்பந்தப்பட்டவங்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. நிர்மலாதேவி மீதான தாக்குதலும், அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் அதன் வெளிப்பாடுதான்.” என்றார்.