![Nirmala Devi case; Judge sensational verdict](http://image.nakkheeran.in/cdn/farfuture/aNnW9ROvLa-TUOu9TQfw-9-V5jNtrlkrh_wdAPcBIJU/1714377163/sites/default/files/inline-images/nirmala-devi-art_0.jpg)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவாகி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில் ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது.
![Nirmala Devi case; Judge sensational verdict](http://image.nakkheeran.in/cdn/farfuture/y22X1WNz2bcWu4LchaHDISvzmn61cjL5scClDC5NpI4/1714377181/sites/default/files/inline-images/judgement--art-file_24.jpg)
அதே சமயம் தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் கடந்த 26ஆம் தேதி ஒத்திவைத்த தீர்ப்பினை இன்று (29ஆம் தேதி) வழங்கியிருக்கிறது. முன்னதாக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்தும், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனவும் அறிவித்து நீதிபதி பகவதி அம்மாள் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.