"நாங்கள் எரிந்தால் தான் நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்..? நடவடிக்கை எடுக்காதவரை எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை" என வெகுண்டெழுந்துள்ளனர் விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ளது சின்னவநாயக்கன்பட்டி கிராமம். சுமார் 3000த்திற்கும் குறைவில்லாத மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வசிப்பது கம்பளத்து நாயக்கர் சமூகமே..!! இங்கு கல்வித் தேவைக்காக இந்து நாடார் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் இந்து நாடார் ஆரம்பப்பள்ளி இருப்பினும், மொத்தம் கல்விப் பயிலக்கூடிய மாணக்கர்களில் சுமார் 112 மாணவர்கள் மேற்கண்ட கம்பளத்து நாயக்கத்து சமூகத்தை சார்ந்தவர்கள்.
சமீபத்தில், ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் ஓய்வு பெற, அப்பதவிக்கு ஆசிரியரை நிரப்பும் வேலையை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள, " எங்களுடைய மாணக்கர்கள் தான் இங்கு அதிகம் படிக்கினனர். அதனால் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆசிரியப்பணி வாய்ப்புக்கொடுங்கள்." என கோரிக்கை வைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு உரிய அரசு விதிமுறைகளின்படி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என்றுள்ளது நிர்வாகம். இதனால் அதிருப்தியடைந்தவர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிக்கவே, தாசில்தார், கோட்டாட்சியர் என பேச்சு வார்த்தை நடத்தியும் திருப்தியடையவில்லை அவர்கள்.
" தாசில்தார், கோட்டாட்சியர் ஒரு சார்பாக பேசுகின்றனர். மாவட்ட ஆட்சியர் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே..? ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் சிட்டின்னு பேசும் மாவட்ட ஆட்சியர், 15 நாளாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் அடிப்படைக் கல்வியினைக் கண்டு கொள்ளாமல் விடலாமா..? இன்று வரைக்கும் மௌனம் சாதித்து ஒரு நடவடிக்கையும் எடுக்ககாமல் எங்களை ஒதுக்குகிறார் அவர். நெல்லையை மாதிரி தீக்குளித்தால் தான் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா.?" என கேள்வி எழுப்பி தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் புறக்கணித்து வருகின்றனர் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தினர்.