Skip to main content

43 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

NIA raids at 43 places; Important documents were seized

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 

நேற்று சென்னை மற்றும் கோவை போன்ற பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் 20 இடங்களிலும் சென்னையில் 5 இடங்களிலும் தமிழகத்தில் பிற பகுதிகளிலும் என மொத்தம் 45 இடங்களில் சோதனை நடந்தது.

 

இந்நிலையில் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், செங்கல்பட்டு, நீலகிரி, நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதே போல் கேரளாவிலும் பாலக்காடு மாவட்டத்தில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

 

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்