தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல் மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தேனி கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டில் சோதனை நடைபெற்றது. சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் ரஸாக், முகமது யூசுப், முகமது அப்பாஸ், கெய்ஸர், சாதிக் அலி ஆகியோர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் டிஜிட்டல் ஆயுதங்கள், ஆவணங்கள், சட்ட விரோத ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.