வேதாரண்யத்தில் அப்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது அதே இடத்தில் அரசு சார்பில் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
வேதாரண்யம் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரது கார் மோதி விட்டதாக தெரிகிறது. இதனால் காயம் அடைந்த ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாண்டியனின் காரை ஓட்டிச் சென்ற அவரது ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அப்போது ராமகிருஷ்ணன்புரத்தைச் சேர்ந்த 10 பேர் பாண்டியனின் கார் மற்றும் காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைகண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பல் பாண்டியனின் காருக்கு தீ வைத்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். அவர்களை வன்முறை கும்பல் தடுத்து நிறுத்தியதால் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காவல் நிலையத்தில் மூன்று காவலர்கள் மட்டுமே இருந்ததால் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
கலவரத்தில் காயமடைந்த பாபுராஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு அங்கே இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தது. இதனால் வேதாரண்யத்தில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் உடைக்கப்பட்ட அந்த சிலைக்குப் பதிலாக அரசு சார்பில் புதிய சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 59 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மேட்டுப்பாளையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. அதேபோன்று விருத்தாச்சலத்தில் அரசு பேருந்து மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
அதேபோல் சென்னையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட 50க்கும் மேற்பட்ட விசிக உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.