![Husband's drinking .. Suspicion .. Woman passes away by jumping into well with children!](http://image.nakkheeran.in/cdn/farfuture/jeCllBKftYqvTLS60utIMKppLvcIvP4kGrn26S_t6kY/1638161739/sites/default/files/inline-images/th-1_2308.jpg)
குடிப்பழக்கமும் மனைவி மீதான சந்தேகமும் ஒரு குடும்பத்தில் 3 உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன.
விருதுநகர் – தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் 11 ஆண்டுகளுக்கு முன், தனது உறவுக்காரப் பெண்ணான லட்சுமி பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு தர்ஷினி பிரியா (வயது 9), சிவசண்முகவேல் (வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.
விடமுடியாத மதுப்பழக்கத்தால், மனைவி லட்சுமிபிரியா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வது, சிவகுமாருக்கு வாடிக்கையாகிப்போனது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பல தடவை சிவகுமாரிடம் ‘நான் செத்துருவேன்..’ என்று லட்சுமி பிரியா கூறிவந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி பிரியா யாருடனோ செல்ஃபோனில் பேசியதைப் பார்த்து சந்தேகம்கொண்ட சிவகுமார், பிரச்சனை செய்திருக்கிறார். ஏற்கனவே நொந்துபோயிருந்த லட்சுமிபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு பாழடைந்த கிணற்றுக்குச் சென்றுள்ளார். இரு குழந்தைகளையும் தன் உடலுடன் சேர்த்து சேலையால் கட்டிக்கொண்டு, பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். மூவரும் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள்.
மூன்று உடல்களையும் விருதுநகர் தீயணைப்பு படையினர் மீட்ட நிலையில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.