இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்கராக கண்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 18 ஆண்டுகளாகத் தக்கராக பணிபுரிந்த இவர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணைச் செயலாளர் செல்லத்துரை என்பவரை கோவில் தக்கராக நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், 5 பேரை கோவில் அறங்காவலராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, ‘மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த பி.கே.எம். செல்லையா, மதுரை காந்தி நகரைச் சேர்ந்த டி. சுப்புலெட்சுமி, மதுரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல் ராஜன், மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த மு. சீனிவாசன், மதுரை அரசடியைச் சேர்ந்த எஸ். மீனா ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசாணை வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள் பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்’ என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன் என்பவர், தமிழக சட்டசபை சபாநாயகராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்து மறைந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மனைவியும், தற்போதைய தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.