தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அரசுடமையாக்கப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி, மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரிகளையும் அரசு ஏற்று நடத்துகிறது. இந்த கல்லூரிகளில் மொத்தம் 3,350 இடங்கள் உள்ளன. அவற்றுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. சில கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டில், ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்-லெஸ் மேலாடைகள், லெகிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளை மருத்துவக் கல்லூரிகளில் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் வகுப்பறையின் உள்ளே செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம், மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.