திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவளர்ச்சோலை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு முதலில் மாநகர போலீசார் விசாரித்தனர். அப்போது திருச்சி காவல்துறை ஆணையராக இருந்த சைலேஸ்குமார் யாதவ், இந்த வழக்கை தனிப்படை அமைத்து விசாரித்தார்.
எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அப்போது டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்றினார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சி.பி.ஐ. விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் முடிவில் வழக்கு சி.பி.ஐ. வசம் மாறியது.
சி.பி.ஐ.க்கு மாறி 1 வருடம் ஆகிய நிலையில் ராமஜெயத்தின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.
ராமஜெயத்தின் நினைவு நாளான இன்று, அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் இருக்கும் ராமஜெயம் முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் இருப்பதைவிட சற்று கூடுதலாக கட்சியினர் திரண்டு இருந்தனர். திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், பெரம்பலூர் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன், ஆகியோர் கலந்து கொண்டு ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
வேட்பாளர்கள் அனைவரும் கே.என்.நேருவுடன் ஒரு தனி அறையில் அமர்ந்து தேர்தல் குறித்து விவாதித்தனர். 3 வேட்பாளர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது பாரிவேந்தர், 3 பேரும் ஜெயிப்பதற்கு கேர் எடுத்து வேலை செய்பவர் கே.என்.நேரு. அதனால்தான் அவருடைய கேர் கல்லூரிக்கு வந்திருக்கிறோமென சொல்ல பாரிவேந்தரின் இந்த நகைச்சுவை பேச்சை கேட்டு உண்மைதான் என்று போல் ஆமாம். ஆமாம் என்று தலையாட்டினார்கள்.