போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் நடவடிக்கையாக இந்த திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருந்த நிலையில், தமிழக அரசும் இது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. இனி புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகன விதிமீறல்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறுவோருக்கான அபராத பட்டியலும் வெளியாகியுள்ளது.
அதன்படி தலைக்கவசம் அணியாவிட்டால் முன்பு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் முன்பு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 10,000 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை பிடிபட்டால் 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கினால் முன்பு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான முறையில் பயணம் செய்தால் முன்பு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சாலை பந்தயத்தில் ஈடுபட்டால் முன்பு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் முறை சிக்கினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், அவசர சேவை வாகனங்களுக்கு சாலையில் வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.