வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் சந்திரா. இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி, அரசு மற்றும் அரசு சார்ந்த 94 பள்ளிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் சம்பள பட்டியலை பராமரிப்பது, மானியத் தொகை வழங்குவதாகும். இவரின் கீழ் உள்ள பதிவேடுகளை ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள தணிக்கை துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 19 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இந்த கையாடலை அலுவலக உதவியாளர் வாலாஜா ரபிக் நகரை சேர்ந்த சந்திரா, அலுவலக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சுதாகர், ஊரிஸ் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து நடத்தியிருப்பது இரண்டு மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அலுவலக பெண் உதவியாளர் சந்திரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என தலைமறைவானார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பானுமதி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான உதவியாளர் சந்திரா உட்பட 3 பேரை தேடி வந்தனர்.
கைதாவதற்கு முன்பு உடல்நலக்குறைவால் சத்துணவு அமைப்பாளர் குமரவேல் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த சந்திராவை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனிசெல்வம் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டரை தேடி வருகின்றனர்.