அறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய போற்றுதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ''பேரறிஞர் அண்ணாவை அவரது நினைவுதினத்தில் போற்றி வணங்கி மகிழ்வோம்'' என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ''தமிழ்மொழி, தமிழினம் என எந்த நேரமும் தமிழ் தமிழ் என தமிழ் சமுதாயத்திற்காக வாழ்ந்திட்ட பேரறிஞர் அறிஞர் அண்ணா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ''தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் அண்ணா. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர் அண்ணா. தமிழ்த் தாயின் தவப்புதல்வன் அண்ணா அவர்களின் நினைவுதினத்தில் நினைவஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்'' என துணை முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் திமுகவினர் பலர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள திமுக தொண்டர்களுடன் உதயநிதி ஸ்டாலின் அமைதி ஊர்வலம் மேற்கொண்டுள்ளார்.