தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). கடந்த செவ்வாய்க்கிழமை (25.04.2023) காலை லூர்து பிரான்சிஸ் பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் அவரை வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வி.ஏ.ஓவின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வி.ஏ.ஓவின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படியில் ராமசுப்பு என்பவரையும் மாரிமுத்து என்பவரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷை நியமித்து தென்மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் பின்புலம் என்ன என்பது குறித்தும் மணல் கடத்தல் விவகாரம் குறித்தும் ஆழமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.