உருமாற்றம் பெற்ற கரோனா பரவும் சூழலில், வெளிநாடுகளில் இருந்துவரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் கரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 27ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 16 கோடியே 81 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 97 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டு, 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 1 லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கரோனா பிரிட்டனில் பரவத் துவங்கியுள்ளது.
மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டனில் இருந்துவரும் விமானங்கள் டிசம்பர் 31ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், சீனாவில் இருந்துவரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்துவந்த பயணிகள் மூலமும் கரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை, மத்திய அரசு தற்போதும் செய்கிறது. கடந்த ஏழு நாட்களில் பிரிட்டனில் இருந்து வந்த 1,088 பயணிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளைப் போல இன்னொரு ஊரடங்கை அறிவித்தால், மிக மோசமான நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை.
வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை, கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும். ஐந்தாவது நாள் கரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.