நாகை அடுத்துள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காசோலையைத் திருத்தி எழுதி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட கணக்காளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருபவர் நெடுமாறன். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு கொடுத்த 36,435 ரூபாய்க்கான காசோலையை முன்பக்கத்தில் ஒன்றைச் சேர்த்து 1 லட்சத்து 36,435 ரூபாயாக திருத்தி மாநில வங்கியின் நாகை நகரக் கிளையில் பணம் எடுத்துள்ளார்.
அதேபோல, தொடர்ச்சியாக 7,268 ரூபாய்க்கான மற்றொரு காசோலையில் திருத்தம் செய்து, 17,268 ரூபாயாக மாற்றி பணம் எடுத்திருக்கிறார். இதுபோல் தொடர்ந்து நூதனமான மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த திருமருகல் ஊராட்சி ஆணையர் நெடுமாறனிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். அதில், அவர் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் காசோலையில் மோசடி செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஆணையர் ஞானசெல்வி கொடுத்த புகாரில் கணக்கர் நெடுமாறன் மீது திட்டச்சேரி போலீசார் காசோலை மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காசோலை மோசடியில் ஈடுபட்ட கணக்கர் நெடுமாறன் தற்போது மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.