தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது நகரும் வேகம் 10 கி.மீ. இல் இருந்து 9 கி.மீ. ஆகக் குறைந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதோடு தமிழகத்தில் இன்றும் (29.11.2024), நாளையும் (30.11.2024) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (28.11.2024) வெளியிட்டப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30ஆம் தேதி காலை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணியளவில் மையம் கொண்டது. எனவே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்காமல் கரையைக் கடக்க கூடும். தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வழுத்த மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் பெங்கல் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இது, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை (30.11.2024) காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையைக் கடந்ததும் வடக்கு உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து 400 கி.மீ. தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.