நேபாள நாட்டில் இருந்து தமிழகத்திற்கு சுற்றலா வந்தபொழுது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் நேபாளிகள் 9 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்தை சேர்ந்த மூவர் தங்குவதற்கு இடம் இல்லாமல் விபத்துக்குள்ளான வாகனத்திலேயே தங்கி வருகின்றனர்.
நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 34 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்திருந்தனர். வட இந்தியாவில் பல கோயில்களை சுற்றிப்பார்த்த அக்குழுவினர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு, பிப். 20ம் தேதியன்று சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரு மினி பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரிப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, நேபாள நாட்டினர் சென்ற அந்த மினி பேருந்து மீது பெங்களூருவில் இருந்து வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில். நேபாளத்தைச் சேர்ந்த டீக்காராம் (55), புல்கரிசவுத்ரி (50), பீர்பகதூர் ராய் (55), கோபால் தமங் (56), விஷ்ணு தாங்கல் (60), போதினி (55), ராசிலால் சவுத்ரி (65), முராத்தி (70) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் போதினி, புல்கரி சவுத்ரி ஆகிய இருவரும் பெண்கள்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக்குள்ளான அந்த இரண்டு பேருந்துகளும் ஓமலூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த உறவினர்களால் நேபாளம் செல்ல முடியாமல் தவிக்கும் மூன்று நேபாளிகள் விபத்தான வாகனத்திலேயே கடந்த 8 நாட்களாக தங்கியுள்ளனர்.
உறவினர்கள் மருத்துவமனையில் இருப்பதாலும், போலீசார் விசாரணை இருப்பதாலும் நேபாளம் செல்ல வழியின்றி வந்த பேருந்திலேயே தங்கி இருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.