செவ்வாய்க்கிழமையன்று நெல்லை ரெட்டியாப்பட்டியில் வேலைக்காரப் பெண்மணி, கணவர் உட்பட கொலையானார் நெல்லையின் முன்னாள் மேயராக பதவி வகித்த தி.மு.க.வின் உமா மகேஸ்வரி. தொடக்கத்தில் இது ஆதாயக் கொலை என மேம்போக்காக விசாரணையைத் துவங்கிய போலீசாருக்கு பல தரப்பிலும் அழுத்தம் வர, தற்பொழுது தான் கொலைக்கான காரணம் இதுவாக இருக்குமோ..? என்ற சந்தேகத்தில் கொலையாளியைத் தேடி பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது.
1996-2001ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட நெல்லை மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கொலையுண்ட உமாமகேஸ்வரி. தற்பொழுது நெல்லையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ரெட்டியாப்பட்டியில் தனது கணவர் முருகசங்கரனோடு வசித்து வருகின்றார். அருகில் 100 மீட்டர் தூரத்தில் மகள் வீடு இருப்பினும் இவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பது வேலைக்காரப் பெண்மணியான மாரியம்மாள் மட்டுமே.! இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளனர் மூவரும்.!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், "மேயரின் கையிலுள்ள வளையல்கள், கழுத்து செயின் உள்ளிட்டவை காணாமல் போக", அவசரம் அவசரமாக அறிவித்தது இது ஆதாயக்கொலையென..!! டிஜிபி தரப்பிலிருந்து லெப்ட் ரைட் விழுந்த நிலையில் கொலையாளியைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். அதற்காக தனிப்படை அமைத்துள்ளோம் என சாதுர்யமாக தப்பித்தது நெல்லைப் போலீஸ். இது இப்படியிருக்க, " பெண் ஒருவர் கொலையாளியாக இருக்க வாய்ப்புண்டு என குறிப்பிட்ட அந்தப் பெண் நபரைத் தேடி மதுரைக்கு விரைந்துள்ளது தனிப்படை." என்கின்ற தகவல் கிடைத்துள்ளது.
இதுக்குறித்துப் பேசிய தனிப்பிரிவு டீமோ, "எங்களுக்கு கிடைத்த தகவலின் படி நெல்லை முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையில் சம்பந்தப்பட்டது கொலையுண்ட மேயர் குடும்பத்திற்கு தெரிந்த நபர்களாகவே அவர்கள் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அந்த சம்பவத்தில் கிடைத்த தடயங்களில் அங்கு வந்த நபர்களை உட்கார வைத்து பேசியிருக்கின்றார் உமா மகேஸ்வரி. வந்த நபர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னரே கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். அது போக அந்தக் கொலையில் பெண்கள் மூவர் உட்பட ஆண்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு. அதனடிப்படையில் ஒருவரை சந்தேகித்தோம். சந்தேகப்பட்டது சரியென சம்பவம் நடைபெற்ற பொழுது நெல்லையில் டவர் சிக்னல் காண்பித்த அந்தப் பெண்ணின் செல்போன் டவர் சிக்னல் தற்பொழுது மதுரையை காட்டியுள்ளது. அதனால் அங்கு ஏசி மற்றும் இரு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஒரு டீம் மதுரைக்கு சென்றுள்ளது. மதுரை கூடல் நகர் பகுதியில் தஞ்சமடைந்த அந்தப் பெண் கொலையாளியாக இருக்க வாய்ப்புண்டு என்பதால் கவனமாக அணுகி வருகின்றோம். விரைவில் கொலையாளி யார் .? கொலைக்கான காரணம் என்ன? என்பதனை மாநகர காவல்துறை அறிவிக்க வாய்ப்புண்டு" என்கின்றனர் அவர்கள்.