"திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன வீரம்? பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்டபார்வை!" என ஹர்பஜனும், "என்ன ஒரு வீர தீரம்? என அமிதாப்பச்சனும் ட்வீட் செய்துள்ளார். அவர்களுக்கு போட்டியாக உலகமெங்கும் கடையம் தம்பதியினரின் துணிச்சலைப் பாராட்டி டுவிட் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பாரதியின் செல்லம்மா பிறந்த ஊரான நெல்லை மாவட்டம் கடையத்திலுள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான கல்யாணிபுரத்தில் சுமார் 5 ஏக்கர் அளவில் பரந்து விரிந்த எலுமிச்சை பண்ணையின் முகப்பிலேயே உள்ளது. தோப்புடன் கூடிய அந்த வீடு பல பறவைகளுக்குக் கூடு என்றாலும், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸில் வேலைப் பார்த்து விருப்ப ஓய்வுப் பெற்ற சண்முகவேலுவுக்கும், அவரது மனைவி செந்தாமரைக்கும் அது தான் சொர்க்க பூமியும் கூட!! மகள் மற்றும் மகன்கள் பணி நிமித்தமாக பெங்களூரு, சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் இந்த தோப்பு வீட்டையும், தோப்பிலுள்ள மரங்களையும், குருவிகளையும் விட்டு பிரிய மனமில்லை இருவருக்கும், மன நிம்மதி மட்டுமின்றி வருவாயையும் ஈட்டித் தந்த அந்த தோப்பு தற்பொழுது உலகளவில் லேண்ட் மார்க் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தோப்பு வீட்டின் முகப்பில் நாற்காலியில் சண்முகவேலு ஓய்வாக அமர்ந்துக்கொண்டிருக்க, அவரின் பின் பக்கமிருந்து ஒரு முகமூடித்திருடன் ஓசைப்படாமல் முன்னேறி அவரின் கழுத்தில் துணடைப் போட்டு இறுக்கி அழுத்திய வேளையில், சப்தம் கேட்டு வீட்டின் உள்ளேயிருந்து செந்தாமரையோ கையில் கிடைத்ததையெல்லாம் அவன் மீது தூக்கி வீசுகிறார். அதே வேளையில் மறைந்திருந்த இன்னொரு முகமூடி திருடனும் வெளிப்பட்ட வேளையில், கழுத்தில் இறுக்கப்பட்ட துண்டுடன் போராடத் துவங்கினார் சண்முகவேலு. கழுத்தில் கிடந்த துண்டை முன்பக்கம் இழுத்து, அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியை சரிய செய்து லாவகமாக தப்பிய அவர், மனைவி துணையுடன் துணிச்சலுடன் இரு முகமூடிக் கொள்ளையர்களைத் தாக்க தொடங்கினார்.
அதில் ஒரு முகமூடித் திருடனோ கையில் அரிவாளைக் கொண்டு வெட்டத் தொடங்கினான். மறுமுனையில் நாற்காலி, சேர்களை விட்டெறிந்த செந்தாமரைக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை சந்தர்ப்பமாக கொண்ட மற்றொரு திருடனின் கையில் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் தங்கசங்கிலி சிக்கிக்கொள்ளவே எஸ்கேப்பாகினர் இருவரும்.! துணிச்சலுடன் போராடிய தம்பதியினரின் வீர தீரமும், கொலைக்கு முயற்சித்து தப்பித்த முகமூடித்திருடர்களும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாக அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்நிலைய ஆய்வாளர் ஆதிலட்சுமி குற்ற எண் 233/19 u/s 394 IPC பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய வேளையில், செவ்வாய்க்கிழமை அன்று சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி.அருண் சக்திகுமாரும் வயதான தம்பதிகளைப் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டார். இது இப்படியிருக்க, கடையம் தம்பதியின் துணிச்சல் மிக்க வீடியோ பார்த்த அனைவரும் தம்பதிகளைப் பாராட்டி வர, இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தம்பதியினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.