மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்துள்ள மேலப்பாதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 30 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அதனை அறியாத அந்த சிறுவன் தனது அம்மாவிடம் காலில் முள் குத்திவிட்டது என்று அழுதுள்ளான். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்க நிலைக்கு சென்றதைக் கண்ட அவனது பெற்றோர் பதறியடித்துக் கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். அப்போது சிறுவனைச் சோதித்துப் பார்த்து இரத்தப் பரிசோதனை செய்த பணியில் இருந்த மருத்துவர்கள் பெற்றோரிடம், “உங்க பையன் கஞ்சா, சிகரெட் என்று ஏதோ ஒரு போதைப்பொருளை சுவாசித்திருக்கிறான். அதனால் தான் உங்க பையன் போதையில் இருக்கிறான். போதை தெளிந்த உடன் உங்க பையன் சரியாகிடுவான். உங்க பையனோட உயிருக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்லை” எனக் கூறி அந்த சிறுவனை நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள்.
மறுநாளும் அந்த சிறுவன் கண்விழிக்கவில்லை. மயக்க நிலையிலேயே (கோமா ஸ்டேஜ்) இருந்துள்ளான். மறுநாள் பணியில் இருந்த வேறு ஒரு மருத்துவர் சிறுவனை சோதித்துப் பார்த்துவிட்டு, “சிறுவனை விஷப்பாம்பு கடித்துள்ளது. விஷம் உடம்பில் முழுமையாகப் பரவியிருக்கு. சிறுவனின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. உடனே திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்க” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவசரம் அவசரமாக சிறுவனை திருவாரூர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். திருவாரூரில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். வேறு வழியின்றி பதறித் துடித்துக்கொண்டு தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தஞ்சை மருத்துவமனையில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவனின் உயிரிழப்புக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியமும், மருத்துவ நிர்வாகமுமே காரணம் எனக் கூறி சிறுவனின் உடலை எடுத்து வந்து மயிலாடுதுறை மருத்துவமனை வாயிலில் ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு வைத்து நூற்றுக்கணக்கானோர் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஒன்றும் அறியாத சிறுவனை போதைப்பொருள் உபயோகித்ததாகக் கூறி மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில், “நாளை விசாரணை குழு, சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை மேற்கொள்ளும். தவறு யார் செய்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு தன் விருப்ப நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், புதிதாக உருவாகியுள்ள நிலையில் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. சிகிச்சையில் சில குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் உள்ளதால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார்.