நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான், மாணவி அபிராமி. இவர்களின் தந்தையர்கள் டாக்டர் வெங்கடேஷ், சரவணன், டேவிஸ், முகமது ஷபி, மாணவியின் தாய் மைனாவதி என 10 பேர் கைதாகினர். இதில் 5 மாணவர்களுக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. மைனாவதியை தவிர மற்ற 4 பேருக்கும் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதைத்தொர்ந்து, அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த போது சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் ரிஷிகாந்த் விண்ணப்பத்தில் வேறு ஒருவரின் புகைப்படம் இருந்தது. இதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுவதை அறிந்து ரிஷிகாந்த், அவரது தந்தை ரவிக்குமார் (52), உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரினர்.
மாணவருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ரவிக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது. நேற்று மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசில் ரவிக்குமார் ஆஜரானார். அங்கிருந்து அவரை நேற்று மதியம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து, தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் இரு மாதங்களுக்கு மேலாகியும் முக்கிய புள்ளிகளான புரோக்கர்கள், மாணவர்களுக்காக தேர்வு எழுதிய போலி மாணவர்களை போலீசார் கைது செய்யவில்லை. சிலரை பற்றிய விபரங்கள் வெளியே தெரியக்கூடாது என உயர் அதிகாரிகளின் நிர்பந்தம் இருப்பதால் போலீசார் நிருபர்களிடம் பேச தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.