போலி நீட் மதிப்பெண் சான்று விவகாரத்தில் மாணவியின் தந்தை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி ஒருவர், நீட் தேர்வில், 27 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 610 மதிப்பெண் பெற்றதாக போலிச் சான்றிதழை மருத்துவக் கலந்தாய்வில் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவியின் மீதும், அவரது தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் மாணவியின் தந்தையை நேரில் ஆஜராகுமாறு மூன்று முறை சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரைக் கைது செய்யமுடிவு செய்த காவல்துறையினர், தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தநிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பாலச்சந்திரனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
பின்னர் அவரை, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, பல் மருத்துவர் பாலச்சந்திரனை ஜனவரி 11- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் சிறையிலடைக்கப்பட்டார்.