நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, மருத்துவ இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலைசெய்துகொண்டார். அனிதாவின் மரணம் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தின.
‘டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற பெயரில் அனிதாவின் வாழ்க்கை சினிமாவாகவும் எடுக்கப்பட்டு வந்தது. அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி, அனிதா கேரக்டரில் நடிக்க, அஜய்குமார் இப்படத்தை இயக்கி வந்தார். மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி, எஸ்.பாலாஜி இப்படத்தை தயாரித்து வந்தனர்.
இந்நிலையில், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முட்டல்,மோதல் வந்து வேறொரு தயாரிப்பாளரை வைத்து அஜய்குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். இது தெரியாமல், வேறொரு இயக்குநரை வைத்து இப்படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார்கள் ராஜகண்பதியும், பாலாஜியும். இப்போது விசயம் தெரிந்ததும், ‘’படத்தின் தலைப்பை நான் தான் பதிவு செய்து வைத்துள்ளேன். அதனால் என் அனுமதி இல்லாமல் அந்த டைட்டிலை அஜய்குமார் பயன்படுத்தமுடியாது’’ என்று கொடி பிடிக்கிறார் ராஜகணபதி.
அனிதாவின் குடும்பத்தின் முழு அனுமதியை பெற்ற பின்னரே இப்படத்தை எடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இயக்குநருக்கு இதில் ஆரம்பத்தில் இருந்தே நேர்மாறாக இருந்துள்ளார். அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் காட்டப்பட வேண்டிய பவுண்டடு ஸ்கிரிப்ட்டும் இயக்குநர் கொடுக்காததால், அனிதாவின் அண்ணனும், தயாரிப்பாளரும் இயக்குநருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதில் மனஸ்தாபம் ஏற்பட்டு வெளியேறியுள்ளார் இயக்குநர்.
டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ். படம் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது பலரையும் அதிரவைத்திருக்கிறது. எதிரும் புதிருமாக இருக்கும் இக்குழு, மீண்டும் ஒன்றுபட்டு இப்படத்தை கொண்டு செல்வதற்காக பலரும் முயற்சித்து வருகிறார்கள்.