நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அந்த நிறுவனம் சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல மத்திய மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் 16 ந் தேதி முதல் போராட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த திட்டம் வராது என்று போராட்ட பந்தலுக்கே வந்து உறுதி அளித்ததால் முதல்கட்ட போராட்டம் 22 நாட்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு, ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் ஏப்ரல் 12 ந் தேதி 2 ம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி காவல் நிலையங்களில் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜெம் நிறுவனம் விலகல் கடிதம் :
இந்த நிலையில் ஒப்பந்தம் கெயெழுத்தாகி ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் நெடுவாசல் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் நிறுவனம் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று எந்த பணிகளும் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. கிராம மக்களின் போராட்டத்தை மீறி எந்த நிறுவனமும் பணியை தொடங்க ஊருக்குள் வரக் கூடாது என்று விவசாயிகள் அறிவித்திருப்பதால் ஜெம் நிறுவனத்தால் நெடுவாசல் வரமுடியவில்லை.
இந்த நிலையில் ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டெல்லியில் கூறும் போது.. நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவனப் பெயருக்கு மாற்றித்தரக் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல முறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. ஜெம் நிறுவனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியாபார நிறுவனம் தான். ஆனால் ஒரு வருடங்களுக்கு மேலாக சம்மந்தப்பட்ட நிலம் மாற்றிக் கொடுக்காததால் பணியை தொடங்க முடியாமல் இழப்பு எற்பட்டுள்ளது. அதனால் நெடுவாசல் திட்டத்திற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் மகிழ்ச்சி :
இந்த அறிவிப்பு பத்திரிக்கையில் வெளிவந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடிய நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் ஜெம் நிறுவனம் நெடுவாசல் திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
மேலும் நெடுவாசல் காக்க போராடிய விவசாயிகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், திரைதுறையினருக்கு நன்றி சொல்வதுடன்., இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்த நிறுவனமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மத்திய அரசு முழுமையாக இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த எந்த ஊரிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது என்றனர்.