குழிப்பணியாரம், கந்தரப்பம், வெள்ளைப்பணியாரம், சுசீயம் உள்ளிட்ட எண்ணெய் பலகாரங்களும், கவுணி அரிசி, உக்காரு இவைகளுடன் ஏதாவது ஒரு வகைப் பொங்கல், இடியாப்பம் மற்றும் ரவா இட்லிகள் காலை உணவிற்கும், மாங்காய் வெல்லம் இனிப்பு மண்டி, வெண்டைக்காய், மொச்சைப்பயறு புளிப்பு மண்டி, கூட்டுப்பொரியல், வறுவல், வத்தல், மோர்க்குழம்புகளுடன் மதிய சாப்பாடும், மாலை வேளையில் மகிழம்பூ புட்டு, அரிசிப்புட்டு, கொழுக்கட்டைகளுடன் அன்றையப் பொழுதில் ருசியினை அறியலாம் செட்டிநாட்டில்.! இதில் அசைவ மெனு தனி..!! இத்தைகைய உணவிற்கு பக்கபலமாய் ஹிந்துஸ்தானி, லண்டன் லைட், தில்சே மற்றும் நயகரா எனும் பழரச வகைகளை அறிமுகப்படுத்தி அதற்கும் காப்புரிமையை பெற்றிருக்கின்றனர் என்பது தான் ஹைலைட்டே.!!
" 1997லிருந்து ஜூஸ் சென்டர் நடத்தி வருகிறேன். இந்தத் தொழிலில் நாம் ஏதாவது புதுமை புகுத்தலாமே..? எண்ணும் போதே சின்ன பயம் இருந்தது. செட்டிநாட்டு உணவு வகை தான் உலகம் முழுவதும் பேமஸ்.! அந்த பெயரை எப்படியும் காப்பாற்றிவிடனும், அதே நேரத்தில் மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கவேண்டும் என நினைத்து மிகுந்த சிரத்தையுடன் தான் இந்த ஜூஸ்களை தயாரித்துப் பார்த்தேன். பேரீச்சப் பழம், பால் மற்றும் சாக்லேட் ஆகிய கொண்ட "இந்துஸ்தானி", வாழைப்பழம், பாதாம் இணைந்த "லண்டன் லைட்", ஆப்பிளும், செர்ரியும் கலந்த "தில்சே" இவைகளுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, செர்ரி மற்றும் சப்போட்டா இணைந்த "நயகராவும்" இப்ப காப்புரிமையை வாங்கியிருக்கு..! முதலில் அது "வயகரா" தான், பிறகு தான் வாடிக்கையாளர்கள் கோரிக்கைகேற்ப அது " நயகரா"வாக மாறியது. இப்பொழுது இந்த பழரசங்கள் அனைத்தும் செட்டிநாட்டு உணவுகளுடன் ஒன்றிப் போய்விட்டது. காலை, மதிய வேளைகளில் விருந்தோம்பலில் இதுவும் பிரதான இடம் பிடித்திருக்கின்றது என்பதால் காப்புரிமையை பெற்றுள்ளேன். இந்த செட்டிநாட்டுப் பகுதியில் பழரசங்களில் காப்புரிமைப் பெற்றது நான் மட்டுமே." என்றார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச்சாலையை சேர்ந்த பழமுதிர்ச்சோலை பாலு.