சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து முதலாவது முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் கடந்த 18 ஆம் தேதி (18.04.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த இந்த வழக்கை முடித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இரண்டாவது வழக்கு நீதிபதிகள் எம். ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது. இருப்பினும் இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கத்தை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “எப்ரல் 24 ஆம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என தெரிவித்து வழக்கு விசாரணையை எப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.