திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் அந்த சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரிவிழா கொண்டாடப்பட்டது. பின்னர் 1840- ஆம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா, கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இங்கிருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக அங்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி வந்ததையடுத்து, கேரளா மற்றும் தமிழ்நாடு பிரிந்ததையடுத்து பின்னர் குமரி மாவட்டமும் தாய் தமிழ்நாடோடு 1954- ல் இணைந்த பிறகும் இந்த நவராத்திரி விழா நிறுத்தப்படாமல், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில நல்லுறவை ஏற்படுத்தும் விழாவாக மாறியது. இதையடுத்து, இந்த நவராத்திரி விழா இன்று வரை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
இதற்காக கன்னியாகுமரி மாவட்டம், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி விக்கிரங்கள் பத்மநாபபுரம் அரண்மனை வாயிலில் பல்லக்கில் வைத்து இரு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வருவாய்துறை, தேவசம்போர்டு மற்றும் தொல்லியல் துறை அதிகாாிகள் காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆயிரகணக்கான பொதுமக்கள் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு மன்னரின் உடை வாளை மாற்றி இரு மாநில போலீசாரின் அணி வகுப்பு மாியாதையுடன் சுவாமி விக்கிரங்களுடன் கூடிய பல்லக்கை பக்தர்கள் தோளில் சுமந்தபடி யானையுடன் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.
அப்போது 56 கி.மீ தூரம் வழி நெடுகிலும் சாலைகளின் இரு பக்கங்களிலும் கொடி, தோரணங்கள் கட்டி பக்தா்கள் வரிசையாக நின்று திருக்கன் சாா்த்தி ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். மேலும் அன்னதானங்கள் வழங்கி ஒரு விழா கோலம் போல் பூண்டு பெரும் விமர்சையாக இருக்கும்.
இந்த நிலையில் கரோனாவை காரணம் காட்டி கடந்த ஆண்டை போல் பக்தர் இல்லாமல் எளிமையாக நவராத்திரி விழாவை நடத்த இரு மாநில அரசுகளும் முடிவு செய்தன. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தொிவித்தன. இதையடுத்து, அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவாா்த்தையடுத்து பக்தர்கள் கூட்டம் மற்றும் யானை ஊர்வலம் இல்லாமல் விழா நடத்த அனுமதிக்கபட்டது.
இதையடுத்து இன்று (03/10/2021) நவராத்திரி விழா கரோனா கட்டுப்பாடுகளுடனும், குறைவான பக்தர்கள் அனுமதியுடனும் நடந்தது. இதில் மத்திய இணையமைச்சர் முரளிதரன், கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவன்குட்டி, கல்வித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதையடுத்து, திருவனந்தபுரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் சுவாமி விக்கிரங்கள், வருகிற அக்டோபர் 6- ஆம் தேதி திருவனந்தபுரம் கோட்டையகம் நவராத்திரி மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கபடுகிறது. அதிலிருந்து 10- ஆவது நாள் நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்படுகிறது.