கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பந்தமாக கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலானாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்கு வந்த தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜீ.எம்.நகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.