பிரதமர் மோடியின் 70 -ஆவது பிறந்தநாளான இன்று (17/09/2020) அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி மோடியின் 70 -ஆவது பிறந்தநாள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க சார்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னையில் இன்று மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.கவின் மாநிலம், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னையில் இந்த விழாவின்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னையின் முக்கிய சாலைகளில் தமிழக பா.ஜ.கவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. காலை, சென்னை மதுரவாயில் மேம்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி உயர கொடிக் கம்பத்தில் எல்.முருகன் பா.ஜ.க கொடியை ஏற்றினார். பின் பாண்டிபஜாரில் பா.ஜ.கவின் கலை இலக்கிய அணி சார்பில் மோடியின் சாதனைகள் டிஜிட்டலில் திரையிடப்பட்டது. அங்கிருந்து சாரட்டு வண்டியில் யாத்திரை சென்றார். இதில் பா.ஜ.கவின் தொண்டர்கள் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் பாடல், நடனம் என உற்சாகமாக இருந்தனர். பின் 70 அடி நீள கேக் வெட்டப்பட்டது.
2019 -ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரனையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சலர் மகன் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டது. அந்த போனர் விழுந்து ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தது. ஆனால், இன்று சென்னையில் இருந்த பா.ஜ.கவினரின் பேனர்கள் அனுமதியுடன்தான் வைக்கப்பட்டதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று தினமும் சராசரியாக 5,500 என பதிவாகிறது. இதில் சென்னையில் மட்டும் தினசரி 1,000 பேருக்கு குறையாமல் தொற்று பரவுகிறது. மக்கள் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் மட்டும் ரூ.2 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. தொற்று பராவமல் இருக்க இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.
இந்நிலையில் இன்று எல்.முருகன், சென்னை பாண்டி பஜாரிலிருந்து சாரட்டு வண்டி மூலமாக யாத்திரை சென்றபோது பெரும்பாலமான பா.ஜ.க தொண்டர்கள் முகக்கவசம் அணியவில்லை. யாருமே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை.
மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கும் கட்சி மக்களுக்கு முனுதாரணமாக இருக்க வேண்டும் என இந்த யாத்திரை குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க மயிலாப்பூர் பல்லக்கு மாநகர்ப் பகுதியில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் விழாவின்போது, அப்பகுதி மக்களுக்கு இலவச சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொள்ள தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.
அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை, நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.