திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே இருக்கும் கஸ்பா அய்யலூரைச் சேர்ந்தவர் டிரைவர் செந்தில்மணி. செந்தில் மணி - கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு கீதா வெளியே சென்றார். அதன்பிறகு, அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பூசாரிபட்டியைச் சேர்ந்த கீதாவின் தந்தை முருகேசன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து கீதாவை தேடிவந்தனர். கீதாவின் செல்ஃபோனை தொடர்பு சீட்டாகப் பயன்படுத்தி விசாரணை முடுக்கிவிடப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டயைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கீதா அடிக்கடி செல்ஃபோனில் பேசியது தெரியவந்தது.
டிரைவரான ராஜ்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது ராஜ்குமாருக்கும் கீதாவுக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கீதாவை எரித்துக் கொலை செய்துவிட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை ராஜ்குமார் தெரிவித்தார். இதனையடுத்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
கைதான ராஜ்குமார் போலீஸாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் “எனக்கும் கீதாவுக்கும் இடையே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்ஃபோனில் பேசிவந்தோம். கடந்த 29ஆம் தேதி கீதாவுடன் வேடசந்தூர் அடுத்த கோலார்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கீதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றுவிட்டேன்” என்று கூறினார்.
இதனையடுத்து, திங்கள்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ராஜ்குமாரை வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் கவிதா, வடமதுரை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஏராளமான காவல் துறையினர் அழைத்துக் கொண்டு பெட்ரோல் ஊற்றி எரித்த இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர். இந்தச் சம்பவம் வேடசந்தூர் மற்றும் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.