அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கரூர் அருகே இதேபோல் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டு இரு தரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் கடந்த வியாழன் என்று பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வேறு ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். அடுத்த நாள் 12 ஆம் வகுப்பு மாணவன் தரப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் பத்தாம் வகுப்பு மாணவனின் ஊருக்கே சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் இரண்டு கல்லூரி மாணவர்களை முதற்கட்டமாக கைது செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.