மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஒரு மது ஒழிப்புப்போராளி. 2014ம் ஆண்டு மனிதனின் உயிரைக்கொல்லும் மதுவை தடைசெய்யக் கோரி திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நந்தினியும் அவர் தந்தை ஆனந்தனும் துண்டு பிரசுரங்கள் கொடுத்ததாக கூரி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்திருந்தனர்.
அந்த வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியம் அளித்த காவல்துறையினரிடம் “மக்களுக்கு வினியோகிக்கப்படும் மது போதைப்பொருளா? மருந்துப்பொருளா? உணவுப்பொருளா? என கேள்வி எழுப்பினார் நந்தினி. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 328 ன் படி டாஸ்மார்க் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? எனவும் கேட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி “நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது” என்றார்.
உடனே குறுக்கிட்ட நந்தினியின் தந்தை ஆனந்தன் “என் மகள் வாதிட்டதில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் என்ன கருத்து உள்ளது” என கேட்டிருக்கிறார். இதனால், நந்தினிக்கும், அவர் தந்தை ஆனந்தனுக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்படு உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நந்தினியின் திருமணம் ஜூலை 5ம் தேதி நடக்க இருந்த நிலையில் அவர் சிறைசென்றதால் திருமணம் தள்ளிப்போனது.
நந்தினியின் சகோதரி சட்டக் கல்லூரி மாணவி நிரஞ்சனா தமிழக அரசின் இந்த வன்செயலை கண்டித்து கடந்த ஜூலை 8ம் தேதி மதுரை சட்டக்கல்லூரி முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி இருக்கிறார். அவரையும் கைது செய்துள்ளது காவல்துறை.
நந்தினியை திருமணம் செய்துகொள்ள இருந்த குணாஜோதிபாசு என்ற இளைஞர் “திருமணத்திருக்கு பிறகும் நந்தினி மக்களுக்காக போராட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால், திருமணமே போராடித்தான் நடக்கும் என்ற நிர்பந்தத்தை அரசு உருவாக்கியுள்ளது. பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நந்தினி சிறை சென்றது எங்களுக்குப் பெறுமைதான். அவர் விடுதலையாகி வரும்வரை காத்திருப்பேன் என்றார்.
குற்றம் சுமத்தப்பட்டவரே நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லலாம் எனச் சட்டம் இருக்கும்போது, வழக்கறிஞர் படிப்பு முடித்துள்ள நந்தினி தன் சார்பில் வாதாட உரிமையில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தாக கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரின் தந்தை ஆனந்தன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் சொந்த ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் கிடைத்த நிலையில், மதுரை மத்திய சிறையிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 9ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த நந்தினிக்கும் குணாவுக்கும் இன்று (10.07.19-புதன்கிழமை) மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
எம்.ஜி.