முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போயஸ் கார்டன் ஏரியா மக்களோடு, அப்பகுதியைச் சாராத பொது மக்களும் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 8-ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்திய சமூகப்பணிக் கல்லூரிப் பேராசிரியரும் திட்ட இயக்குனருமான ஈனாக், வேதா நிலையத்தை நினைவிடமாக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் அரசு தரப்பில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தைப் போலவே, இன்றும் போயஸ் கார்டன்வாசிகள் பெரும்பாலானோர் வேதா நிலையத்தை நினைவிடமாக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜெ நினைவிடம் அமைப்பதற்கு நில எடுப்பு எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. புதிய நில எடுப்புச் சட்டத்தின் படி நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே கேட்கப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இணையதளம், மண்டல அலுவலகம் போன்ற இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக கடந்த 15 நாட்களாக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், Social impact assessment agency வரைவு அறிக்கை பெறப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறைகள்தான், நில எடுப்புப் பணிகளில் ஈடுபடும். நிபுணர் குழு அமைக்கப்பட்டு இறுதி அறிக்கை ஆய்வு செய்யப்படும். தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் நில எடுப்பு அலுவலராகச் செயல்படுவார். நில எடுப்பிற்கு ஆறு மாத காலம் தேவைப்படுகிறது. ஜூன் மாதம் நில எடுப்பு முடியும். போயஸ் கார்டன் பகுதி மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் முதல்வர் என்கிற காரணத்தால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இனிமேல், முன்பிருந்த கெடுபிடியோ, கட்டுப்பாடுகளோ இருக்காது.” என்றார்.